கருத்தைக் கவரும் சுபாவங்கள் 


கருத்தைக் கவரும் சுபாவங்கள்



" தேவனாகிய கர்த்தர் , பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமு மான சகலவித விருட்சங்களையும் , தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும் , நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார் " ( ஆதி . 2 : 9 ) .


தேவனில் எவ்விதம் தீமை என்பது இல்லையோ , அவ்விதமே நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் தன்னில் தானே தீமை என்ற ஒன்று அற்றதாகவே இருந்தது . மனுஷனுடைய கீழ்ப்படியாமையே தீய விளைவுகளைக் கொண்டுவந்தது . உண்மையான அறிவு என்பது , தேவனுக்குப் பயந்து , அவருக்குக் கீழ்ப்படிவதாகும் . தேவனுக்குக் கீழ்ப்படியாதிருப்பதற்கான அறிவோ தீமையானதாகும் . 


தேவன் தோட்டத்திலிருந்த ஒவ்வொரு விருட்சத்தையும் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமானதாகவே உண்டாக்கினார் . சபையிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையிலும் மனுஷருக்கு முன்பாகவும் பிரியமானவர்களாகவும் , மற்றவர்களுக்கு நல்ல ஆவிக்குரிய ஆகாரத்தைக் கொடுக்கக்கூடிய ஏதுவாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் . மேலும் , தேவனுடைய சபையிலுள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கு ஏதுவான ஜீவ விருட்சமாக இருக்க வேண்டும் . 


விருட்சங்களின் கனிகள் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமானவையாக இருந்தன . " ஆவியின் கனியோ , அன்பு , சந்தோஷம் , சமாதானம் , நீடியபொறுமை , தயவு , நற்குணம் , விசுவாசம் , சாந்தம் , இச்சையடக்கம் " ( கலா . 5 : 22 , 23 ) . இத்தெய்வீக சுபாவங்கள் தேவனுக்கும் மனுஷருக்கும் பிரியமானவையாயிருந்து , மற்றவர்களுடைய ஆவிக்குரிய பசியை ஆற்றும் நல்ல ஆகாரமாயிருக்கின்றன . 


நித்திய ஜீவனையும் , திவ்ய சுபாவத்தின் வளர்ச்சியையும் பெற்றுக் கொள்ளும்படியாக நமக்கு வைக்கப்பட்டுள்ள நிபந்தனை , கீழ்ப்படிதல் ஆகும் . நாம் கீழ்ப்படியாமற்போனால் நித்திய ஜீவனை இழந்து போவோம் ; அத்துடன் தேவனுடைய சபையில் நமக்கு இடம் இராமற்போகும் .

Post a Comment

Previous Post Next Post